புதுடில்லி: கொரோனா வைரசை வெல்ல முழு ஊரடங்கே வழி. எனவே மக்கள் இதனை மீற வேண்டாம். ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி சிரமப்படும் ஏழை மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பிரதமர் மோடி இன்றைய மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
பிரதமர் மோடி மேலும் உரையாற்றியதாவது ; கொரோனா இந்த உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் மடிந்துள்ளனர். இந்த கொரோனாவை, நாம் அனைவரும் ஒன்று பட்டு நின்றால் தான் ஒழிக்க முடியும், கொரோனாவை வெல்ல முடியும். ஊரடங்கு என்பது கொரோனா போரில் வெற்றி பெறவே. நாம் போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊரடங்கு முடிவால் மக்கள் சிலர் என்மீது கோபம் அடையலாம்.
ஊரடங்கு ஒன்றே கொரோனாவை ஒழிக்க சிறந்த வழி. கடினமான முடிவே மக்களை காப்பாற்றும். நான் எடுத்திருக்கும் ஊரடங்கு முடிவால் ஏழைகள், தொழிலாளர்கள் பலரும் சிரமப்படுவார்கள் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் இந்த கடின முடிவை தவிர வேறு வழி இல்லை. ஏழைகள் படும் சிரமத்திற்கு நான் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். உடல் நலமே அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். கீழ்படியாவிட்டால் அனைவரும் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். ஊரடங்கை மீற வேண்டாம்.